சித்திரைப் புத்தாண்டு உற்சவம்
இவ்வாலயத்தில் இடம் பெறும் சித்திரைப் புத்தாண்டு உற்சவம் மிகச் சிறப்பானது ஆகும். ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு அன்று விஷு புண்ணியகாலத்தில் மூல மூர்த்தியான விநாயகப்பெருமானுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று வருடம் பிறக்கும் நேரம் மூலமூர்த்திக்கு விசேட பூசை நடைபெற்று தொடர்ந்து உற்சவமும் நடைபெறும். இவ் உற்சவத்தில் சிறப்பான அம்சங்களாக கோபூசை, கண்ணாடி தரிசனம், என்பன குறிப்பிடத்தக்கதாகும். இக்காலத்தில் அடியார்கள் திரள் திரளாக இங்கு கூடுவார்கள் மேலும் இச் சித்திரைப்புத்ததாண்டு உற்சவத்தின் சிறப்பான ஓர் நிகழ்வாக கைவிசேஷம் கொடுக்கும் நிகழ்வு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அதாவது வருடப்பிறப்பன்று வரும் அடியவர்கள் அனைவருக்கும் பிரதம குருக்கள் அவர்களால் கைவிசேஷம் வழங்கப்படும். இந் நிகழ்வானது இவ்வாலயத்தில் சிவஸ்ரீ செல்லையாக்குருக்கள் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை சிறப்பாக பின்பற்றப்படுவது முக்கிய ஓர் நிகழ்வாகும். மேலும் இப்புண்ணிய காலத்தில் ஸ்நானத்தின் போது மருத்துநீர் வைத்தல் முக்கியமான பிரதானமான ஓர் அம்சமாகும். இதனைக் கருத்தில் கொண்டு தான் மிகச் சிறப்பாக இந் நாயன்மார்கட்டு கிராமத்திலே இவ்வாலயத்தில் மட்டும் தான் மருத்துநீர் வழங்கப்படுவதும் குறிப்பிடதக்கதாகும்.
நவராத்திரி விழாவும் விஜயதசமி உற்சவமும்
நவராத்திரி முதல் நாளன்று காலை வசந்தமண்டபத்திலே மீனாட்சிஅம்மன் வீற்றிருக்க கும்பமும் கொலுவும் வைக்கப்பட்டு பூசை நடைபெறும். பின்பு ஒன்பது தினங்களும் மாலைப்பூசையின் போது மூலமூர்த்திக்கு வழமையான பூசை நடைபெற்றதும் மீனாட்சி அம்மனுக்கு விசேட பூசை இடம் பெற்று சகலகலா வல்லி மாலை தோத்திரம் ஓதப்படும். இறுதி நாளான விஜயதசமி அன்று மானம்பூ திருவிழா இடம்பெறும். அதைத் தொடர்ந்து சிறார்களுக்கு ஏடு தொடக்கலும், குருகுலகல்வி பயில ஆரம்பிக்கும் சைவக்குருமார்களின் சிறார்களுக்கு குருகுலக்கல்வியை ஆரம்பித்து வைத்தலும் நடைபெறும்.
கார்த்திகைத் தீபம்
கார்த்திகை விளக்கீடு அன்று விநாயகப்பெருமானுக்கு விஷேட பூசை நடைபெற்று மாவிளக்கு ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பானை கொழுத்தும் நிகழ்வும் நடைபெறும்.
விநாயக ஷஷ்டி உற்சவம்
கார்த்திகை மாதம் நடைபெறும் விநாயக ஷஷ்டி உற்சவமானது இவ்வாலயத்திலும் நடைபெறுகின்றது. விநாயக ஷஷ்டி விரத ஆரம்ப நாள் தொடக்கம் 20ம் நாள் வரை காலைப்பூசையின் போது மூலமூர்த்தி விநாயகருக்கு விஷேட பூசையும், அஷ்டோத்தரசத நாம அர்ச்சனையும் நடைபெற்று பிள்ளையார்யார் கதை படிப்பும் இடம்பெறும். அத்தோடு 20 நாட்களிலும் விநாயகருக்கு சிறப்பான வெவ்வேறு நிவேதனம் பொருட்களும் செய்து படைக்கப்படும். உதாரணமாக அப்பம் எள்ளுருண்டை, இராசவள்ளிக்கிழங்கு என்பனவற்றைக் குறிப்பிடலாம். இறுதி நாள் அன்று விநாயகருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று வசந்தமண்டபத்திலே உற்சவ மூர்த்தி விநாயகருக்கு விஷேட பூசை நடைபெற்று திருவிழாவும் நடைபெறும்.
மார்கழித் திருவெம்பாவையும் திருவாதிரை உற்சவமும்
மார்கழி மாதம் இ;வ்வாலயத்திலும் திருவெம்பாவை உற்சவம் இடம்பெறுவதாகும். இக்காலத்தில் இங்குள்ள சிவகாமி அம்பாள் சமேத நடேசப் பெருமானுக்கு ஒன்பது தினங்கள் விசேட பூசையானது நடைபெற்ற திருவெம்பாவை ஓதலும் நடைபெற்றும். அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி ஓதுவதும் இங்கு சிறப்பாக இடம்பெறும். ஏனைய ஆலயங்களில் பாடப்படும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் அன்றி இவ்வாலயத்திற்கென தனித்தே விளங்கும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் இங்கு எம்பெருமான் விநாயகருக்காக இயற்றப்பட்டு பாடப்படுவது சிறப்பான ஓர் நிகழ்வாகும். இறுதி நாளான பத்தாம் நாள் திருவாதிரை தினத்தன்று அதிகாலை மகா ஸ்நபன அபிஷேகம் நடராசப் பெருமானுக்கு நிகழ்த்தி விசேட அலங்காரங்களாலும் விசேட நைவேத்தியம், தீபாரதனை , அர்ச்சினை, பூசை முதலிய உபசார பொருட்களினால் உபசரித்தல் இடம் பெறும். இதனை தொடர்ந்து ஆருத்திராதரிசனமும் திருவிழாவும் இடம் பெறும்.
மார்கழித் திருவாசக முற்றோதல் விழா
ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவராகிய அமரர் சிவஸ்ரீ சதா. ஆறுமுகக்குருக்கள் அவர்களின் சிரார்த்த தினத்தன்று திருவாசக முற்றோதல் நடைபெறும். இந்நிகழ்விற்கு பல இடங்களிலிருந்தும் ஓதுவார்கள் வந்து கலந்து கொள்ளுவார்கள். இத்திருவாசக முற்றோதலின் பின் சிவகாமசுந்தரி சமேத நடேசப் பெருமானுக்கு விஷேட பூசை நடைபெற்று திருவீதியுலா வருதலும் இடம்பெறும். தொடர்ந்து மதியம் அன்னதானமும் நடைபெறும்.
தைப்பொங்கல் பண்டிகை
தைப்பொங்கல் பண்டிகையானது இவ்வாலயத்தில் இடம்பெறும் நைமித்திய கிரியைகளில் ஒன்றாகும். தம்ப மண்டபத்திற்கு அடுத்ததான தரிசன மண்டபத்தில் சூரியனின் ரதமானது வரையப்பட்டு அதில் சூரிய கும்பம் வைக்கப்பட்டு அதிகாலை சூரிய உதயத்தின் போது முதலில் சூரியனுக்கு பூசை நடைபெற்று பின்பு மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவாரதெய்வங்களுக்கும் பூசை நடைபெறும். மறுநாள் இவ்வாலய கோமாதாவிற்கு பட்டிப்பொங்கலும் இடம்பெறும்.
மணவாளக்கோல உற்சவம்
இவ்வாலயத்தில் மஹாகும்பாபிஷேக தினமாகிய தை மாத ரேவதி நட்சத்திரத்தன்று நடைபெறும். காலை ஆயிரத்து எட்டு சங்காபிஷேகமானது சிறப்பாக நடைபெற்றும். இதனை தொடர்ந்து அன்று மாலை எம்பெருமானுக்கு திருவூஞ்சலும், திருவிழாவும் நடைபெற்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் விநாயகப் பெருமான் திருவீதியூலா வருதலும் இடம்பெறும்.